Thursday, November 26, 2009

அமைதி விரும்பிகள்

Image result for calm

துயரங்களின்
ஊடே பீரிட்டெழும்
தனிமை சுயத்தை
உள்ளிழுத்துக்கொள்கிறது...

ஆழ்கடலின் மௌனத்தையொத்த
ஆழ்மனதின் மௌனங்கள்
வெடித்துக்கிளம்புகின்றன...

வலி நிறைந்த சொற்களின்
பின்னால் கூடும்
நிசப்தங்களில் சில
கல்லறைகளின் திரிபுநிலைகளை
ஞாபகப்படுத்துவதாயிருக்கிறது...

இசை
கோபம்
வாலிபம்
நீர்
சொற்களின் கடைசி நிமிடங்கள்
இயற்கை
நீங்களும்-நானும்
அமைதி விரும்பிகள்...

Saturday, September 12, 2009

தூரதேசம் மற்றும் காதல்













உன்
நினைவுகளோடு
தூரதேசத்தில்
வாழ்வது
சுகமாய்த்தானிருக்கிறது
அன்பே..

உறக்கம் தொலைத்த
பல இரவுகளில்
ஒரு பெரும் காட்டாற்றினைப் போல
என் ஞாபக வெளியில்
பிரவாகமெடுத்து ஓடுகிறாய் நீ....

அடிக்கடி தோன்றும்
உன் நினைவுகளால்
இயல்பு மறத்தல்
என்பது
சாத்தியமாகியிருக்கிறது....

அன்பு வழியும்
உன் தொலைபேசி
உரையாடலின் இறுதியில்
எனக்குள் நீக்கமற
நிறைந்துபோய் விடுகிறாய்....

ஒரு சிறந்த
பின்னணி இசையைப்
போல
நீங்காத அதிர்வுகளை
எனக்குள்
ஏற்படுத்தி விடுகின்றன
உனது மின்னஞ்சல்கள்

முடை நாற்றமெடுக்கும்
ஒரு குருட்டு
பிச்சைக்காரனின்
பசித்திருத்தலை
ஒத்ததாய் இருக்கிறது
என் விரக தாபம்

உனக்கும் என் பிரிவு
இவ்வாறேயிருக்கலாம்
ஏகாந்தமாய்...

Tuesday, May 19, 2009

இன்று தேவதைகள் தினம்

சூரியனின்
ஒளிக்கற்றைகளுக்கு
வெளிச்சம்
கொடுத்தவள் நீ!!!

தேவதைகளால்
ஆசிர்வதிக்கப்பட்ட
ஒரு தினத்தில் நீ
பிறந்தாயாம்.

நீ பிறந்த நாளின்
இரவில் பெருமழை
பெய்து உலகம் செழித்ததென்றும்
வானவில் தன் நிறங்களை
மறைத்துக் கொண்டதென்றும்
அரியவகை குறிஞ்சி
மலர்கள் பூத்துக்குலுங்கியதாகவும்
சோதிடர்கள்
சொல்லித்திரிகிறார்கள்...

























உலகின் முதல் இசை
உன் முதல்
அழுகையிலிருந்து
பிறந்ததென்றும்
ஏழு ஸ்வரங்களின்
முதலெழுத்தை உன்
பெயரின் முதலெழுத்திலிருந்து
தொடங்கியதாகவும்
இசைஞானி சொல்லிக்
கேட்டதாய் ஞாபகம்!!!

உன் ஒவ்வொரு
பிறந்தநாளன்றும்
உன்னைச் சேர்கின்ற
பூக்களைத்தவிர
மற்றவை நிறமிழந்து
போவதாய்
பூக்கடைக்காரன்
புலம்புகிறான்...

உன் பிறந்தநாளொன்றில்
நீ முத்தமிட்ட
குழந்தையொன்று
கடவுளை
கண்முன்னே கண்டதாய்
தன் தாயிடம்
சொல்லிக்கொண்டிருந்தது!!!

பிறிதொரு
உன் பிறந்தநாளில்
கடல் தன் பேரிரைச்சலை
நிறுத்திக்கொண்டதாகவும்
புயலொன்று உருவாகி
தென்றலாய் மாறிப்போனதாகவும்
வானிலை அறிக்கை
வாசிக்கப்பட்டது...

உன் ஒவ்வொரு
பிறந்தநாளன்றும்
ஒரு லட்சம்
ஆப்பிள் மரக்கன்றுகள்
நட்டு வளர்க்க அரசாங்கம்
ஆணையிடப்போவதாய்
கேள்வி!!!

உன்னைப்பொருத்தவரை
இன்று உனக்கு
பிறந்தநாள்,
உலகத்திற்கு
தேவதைகள் தினம்!!!

Monday, February 9, 2009

எப்படி மறப்பேன்


உன்னோடு பேசித்திரிந்த‌
காலங்களின்
நினைவுகளை அழிக்க‌
முற்படுகிறேன்.

என்னால் முடிந்தவொன்றை
என் கனவுகள்
சிதைத்துவிடுகின்றன‌
ஒவ்வொரு நாளும்....

என் தனிமையின்
அநேக நேரங்கள்
உன்னைப்பற்றிய‌
சிந்தனைகளால்
நிரப்பப்பட்டு விடுகின்றன....

நீ என்னோடு வாழ்வதற்காய்
கட்டி வைத்திருந்த‌
மனக்கோட்டை முற்றிலும்
இடிந்த பின்னும்
தாய்மடி தேடும்
குழந்தை போல்
உன் நினைவுகள் நோக்கியே
என் பயணம்
நீள்கின்றது!

ஒருவேளை
என் நினைவுகள்
உனக்கும் மீதமிருந்தால்
ஒரு வேண்டுகோள்!

என் இத‌ய‌த்தில்
க‌ல்வெட்டாய் கிட‌க்கும்
உன் நினைவுக‌ளை
அழிக்க‌ ஏதாவ‌தொரு
வ‌ழி செய்துவிட்டு
என்னை ம‌ற‌ந்துபோ!!!!