Wednesday, September 24, 2008

புரட்சி செய்குவோம் (சுதந்திரதின கவிதை)


மனதின் படிக்கட்டுகளில்
சுதந்திரத்திற்கான
சுமையை ஏற்றிச்செல்லுங்கள்

இன்றுகாணும் இன்பங்களுக்கு
அன்று கொடுத்த விலை
உயிர்கள்

சுதந்திர பருக்கைச்
சோறுகள்
காலடியில் சிதறிக்கிடந்தும்
மறந்தும் கூட
மாறிவிடவில்லை நாம்.

மயிர்க்கூச்செரியும்
நடனங்களூடே
கழிகிறது வாரக்கடைசிகள்

அமைதிக்கான
நோபல் பரிசுகள்
ஆத்மார்த்தமாய்
வழங்கப்படுவதில்லை
இப்பொதெல்லாம்

ஆசையெனும்
நீண்டதொரு ஆற்றுப்படுகையில்
மனிதத்தின் முடிவுகள்
மரித்துக்கிடக்கின்றன

வாழ்வியலின்
நடைமுறைச்சட்டங்கள்
நம்மோடு ஒத்துப்போவதில்லை
எப்போதும்.

கல்லறை நோக்கிய
வாழ்வின் புனிதப்பயணத்தில்
கற்றவை மூலமே
களவு கலைந்திட
முடியும்.

செஞ்சேற்றுப்புழுதியிலெ
சேருகின்ற
வெப்பம் போல்
தண்ணீரின் கீழிருக்கும்
தனியாத ஊற்றுப்போல்

தமிழனாய்!..

மண்ணில் நல்லதொரு
தொழிற்புரட்சி
செய்திடுவோம்

மானுடம் காப்போம்...

Tuesday, September 23, 2008

நட்புக்கவிதை (எங்கள் இனிய நட்பு பற்றி திரு.அன்பு அவர்கள் எழுதிய கவிதை)


நண்பனே,
உன்னைச்சுற்றியே என்
உலகம் உருள்கிறது...
உலகியலோடு ஊர் உருள
உள்ளீடற்ற உன் உறவுக்குள் மட்டுமே
நான் உருகுகிறேன்.

வாழ்வுப்பேருந்தில் என்னை நீ எப்போதும்
சன்னலோரப்பயணியாக்கி விடுகிறாய்

உன்னோடு இருக்கின்ற ஒரு சில நாழிகையை
பின்னோடும் உன் நினைவுக்கட்சிகளாய்
என் கண்ணோடு நிறுத்துகிறேன் கவலை நீங்க
பண்ணோடு பழந்தமிழ் கேட்டபின்பும்
என்னோடு உறைகின்ற இசையைப்போலே!

சப்பாத்திப்பழமென்ற நட்பை
முள் அறுத்துத்தோல் நீக்கி
பலருடன் பலமுறை புசித்திருக்கிறென் - ஆனால்
உண்டபின்பு உள்நாவில்
முரண்பாடென்ற முள்விதைகளால்
முடிந்துபோனவை ஏராளம்.

தேடுங்கள் கண்டடைவீர்கள்
என்கிறது ஆகமம்!
நாம் பழகித்திரிந்த நாட்களை எங்கு தேட!

தினமும் உயித்தெழுதலோடு
என்றைக்குமாய் உன்நினைவுகள் என்னோடு இருப்பதாக...

ஆமென்!

Monday, September 22, 2008

மாற்றங்கள்


காலைத்தென்றலும்
கார்மேக வானமும்

ராத்திரி
நேரமும்
ரயில் ஓசையும்

தமிழ் வார்த்தைகளும்
தனிமையும்

சலிப்பதெயில்லை
எனக்கு

கவிதை எழுத
ஆரம்பித்ததிலிருந்து....